Wednesday, May 15, 2013



அம்மா 

உதிரத்தை  பாலாக்கி ஊட்டி 
ஊணுறக்கம் மறந்து காப்பாள் 
பிரதிபலன் பாராமல் 
பிறவி தந்து ஆளாக்கினாள் 
தன் மகவு கண்வளர 
தன்னுறக்கம்  தாரைவார்ப்பாள் 
உன் கண்ணில் நீர் கண்டால் 
உசிரையே விட்டிடுவாள் 
அகரம் நீ கற்கும் வேளை
ஆசானாய் முன்னிருப்பாள்
பள்ளியில் நீ படிக்கும் போது 
புத்தகப்பை தான் சுமப்பாள் 
பரீட்சை உனக்கு என்றால் 
அலாரமாய் அவளிருப்பாள் 
கோபத்தில் நீ திட்டும் போதும் 
குழந்தை என பொறுத்திடுவாள்  
நீ யாருக்காக வாழ்ந்தாலும் 
அவள் உனக்காகவே வாழ்ந்திடுவாள் 
அன்பென்றால் என்னவென கேட்டால் 
அன்னையை காட்டுவாயா நீ....?


 
மாற்றம் 

பருவகாலத்து மாற்றங்கள் போல் உன் பார்வை தந்த
மாற்றங்கள் எத்தனை ....

பட்டாம் பூச்சியை
ரசிக்கதெரியாதவன்
வெட்டுக்கிளியைக்கண்டு
லயித்துப் போகின்றேன்.......

வருடிச்செல்லும் தென்றலைக்கூட
திரும்பியும் பார்க்காதவன் 
சூரக்காற்றுக்குள்ளும்
சுரங்கள் பிடிக்கிறேன்......

மலர்களின் வாசனையை
முகர்ந்தேயறியாதவன்
மண்புழுதி வாசனையை
நுரை ஈரலுக்குள் நிரப்புகிறேன்......

சங்கீதம் என்றாலே
சலித்துக்கொள்பவன்
சருகுகளின் சலசலப்பில்
சுருதிகளை சேமிக்கின்றேன்......

பௌர்ணமி நிலவை
மறந்தும்கூட பார்க்காதவன்
அமாவாசை இரவுகளின்
நிசப்தத்தில் மூர்சையாகிறேன்......

வானிலை மாற்றத்திற்கும்
காலநிலை மாற்றத்திற்கும்
கதிரவனே காரணமாம்
என்னுடைய மாற்றத்திற்கு
காரணம் யாரென்று
உனக்கு புரிகிறதா...?